இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதை கண்டித்து மதுரையில் நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்த முயன்ற காங்கிரசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனின் வீடு, அலுவலகத்தை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் பெருமாள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த வழக்கறிஞர்கள், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்களையும், காங்கிரசாரையும் அந்த இடத்தை விட்டு செல்லுமாறு எச்சரித்தனர். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவரை தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதலால் அப்பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. காங்கிரஸ் கொடிகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இதைத் தொடர்ந்து தாக்கப்பட்ட காங்கிரசார் மதுரை கே.கே.நகர் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.