இலங்கையில் அப்பாவி தமிழர்களை உயிரோடு மீட்க, ஆயுதங்களை துறந்து, அமைதி பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண விடுதலைப்புலிகளை அவர்களது ஆதரவாளர்கள் கேட்டு கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் கவலை அளிப்பதாக இருக்கிறது. புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சமாதான பேச்சுக்கு இடம் அளிக்கும் வகையில் சரணடைய வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள், போப் ஆண்டவரின் தூதர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் போர் நடைபெறும் பகுதியில் இருந்து பொது மக்களும், ஐ.நா. ஊழியர்கள் குடும்பத்தினரும் சென்றுவிட்டால் தங்களுடைய எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்று புலிகள் அச்சம் கொள்வதால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு புலிகளால் தடுத்து நிறுத்தப்படுவது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் கட்சி மீதும், மத்திய அரசு மீதும் அபாண்டமாக பழிசுமத்தி வைகோ அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவரது அறிக்கை உண்மைக்கு மாறாக திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளது.
விடுதலைப்புலிகளை பழிவாங்கும் நோக்கத்தோடுதான் சோனியா செயல்படுகிறார் என்று கூறும் நிலைக்கும் சிலர் சென்றிருக்கிறார்கள். ராஜீவ் படுகொலையில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட நளினிக்கு உயிர் பிச்சை அளித்த அருள்நெஞ்சம் கொண்ட சோனியாவின் இரக்க சிந்தனையை கூட இவர்கள் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. எப்படியாவது விடுதலைப்புலிகளை காப்பாற்ற வேண்டும் என்ற ஆத்திரம்தான் இவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.
விடுதலைப்புலிகளுக்கும், நெடுமாறன், வைகோ போன்றோருக்குமிடையே மிக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. இந்த உறவை பயன்படுத்தி போர் பகுதியில் சிக்கி கொண்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற புலிகளை அவர்கள் கேட்டு கொள்ள வேண்டும். அதன் மூலமாக அப்பாவி தமிழர்களை உயிரோடு மீட்க முடியும்.
மேலும் ஆயுதங்களை துறந்து, அமைதி பேச்சு வார்த்தை நடத்த இந்த வாய்ப்பை புலிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று புலிகளின் ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் வலியுறுத்த வேண்டும் என்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.