சீர்காழி ரவிச்சந்திரன் குடும்பத்துக்கு ரூ.3லட்சம் ‌நி‌தியுத‌வி

ஈழத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த சீர்காழி ரவிச்சந்திரன் குடும்பத்துக்கு இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் சா‌ர்‌பி‌ல் ரூ.3 லட்சம் ‌நி‌தியுத‌வி வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று பழ.நெடுமாறன் அறிவி‌த்து‌ள்ளா‌ர்.

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரிழந்த ரவிச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சீர்காழியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ. நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலர் தொ‌ல்.திருமாவளவன், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் துரையரசன்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச் செயலர் பழனி‌ச்சாமி, தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் சுப.இளவரசன், பா.ஜனதா நிர்வாகி வைத்திலிங்கம், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், மாநில வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் கலந்து கொண்டு ரவிச்சந்திரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இரங்கல் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பே‌சிய இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாறன், இலங்கையில் போரை நிறுத்தக்கோரியும், தமிழர்களை பாதுகாக்கக்கோரியும் தற்போது 3-வது தீக்குளிப்பு சம்பவம் நடந்துள்ளது. தமிழக மக்களின் உணர்ச்சி பிழம்பை மத்திய அரசு மதிக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தீக்குளிக்கக்கூடாது. உயிர் தியாகம் செய்யக்கூடாது. சீர்காழி ரவிச்சந்திரனின் தியாகமே இறுதி தியாகமாக இருக்க வேண்டும். உயிர் தியாகம் செய்த ரவிச்சந்திரன் குடும்பத்துக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ரூ. 3 லட்சம் வழங்கப்படும் எ‌ன்றா‌ர்.

முடிவில் ரவிச்சந்திரனின் இறுதி ஊர்வலம் சீர்காழியில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. முடிவில் ஈசானியத் தெருவிலுள்ள மயானத்தில் ரவிச்சந்திரனின் உடல் தகனம் செய்யப்பட்டது.