இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தீக்குளித்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அமரேசன் உடலுக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ ஆகியோர் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டிக்கும் விதமாக சென்னை வண்ணாரப்பேட்டை நமச்சிவாயம் தெருவைச் சேர்ந்த அமரேசன் என்பவர் நேற்றிரவு தீக்குளித்து இறந்தார்.
சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு உடலுக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ ஆகியோர் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தாங்க முடியாமல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் தீக்குளித்தார். அன்றைய தினத்திலிருந்தே அமரேசன் சோகமாக காணப்பட்டார். இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் தாக்கப்படுவதைக் கண்டு தாங்க முடியாமல் இந்த விபரீத முடிவை அமரேசன் எடுத்துள்ளார்.
தீக்குளிப்பு சம்பவத்தை நாங்கள் ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை. தீக்குளிப்பு சம்பவத்தை தவிர்க்க வேண்டும். அமரேசன் இலங்கைத் தமிழருக்காகத்தான் தீக்குளித்தார். ஆனால் காவல்துறையோ அவருக்கு நோய் இருந்ததாக கூறி இலங்கைத் தமிழர் பிரச்சனையை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதற்கு முன்னர் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி ரவி இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்தபோது இதேபோல் காவல்துறையினர் வேறு காரணம் கூறி மூடி மறைக்க முயன்றனர். அந்த விஷயத்தில் காவல்துறையின் பித்தலாட்டம் வெட்டவெளிச்சமானது. அதேபோல் அமரேசன் விஷயத்தில் காவல் துறையினர் இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
அமரேசன் உடல் இன்று பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிற்பகலில் அவரது இறுதி ஊர்வலம் நடக்க இருக்கிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன் உள்ளிட் டோர் பங்கேற்க இருக்கின்றனர்.
அமரேசன் தீக்குளித்து இறந்ததையடுத்து, வண்ணாரப்பேட்டை பகுதி முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இன்று வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. ரோடு பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.