தமிழர்களைக் காப்பதில் கருணாநிதி முதலிடம் - ஸ்டாலின்
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் முதல் அமைச்சர் கருணாநிதி மற்ற தலைவர்களுக்கு எல்லாம் முதலிடத்தில் இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை சார்பில் இன்று நடைபெற்ற பேரணியின் முடிவில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக இலங்கை தமிழர் நல உரிமை பேரவை அமைக்கப்பட்டது.
ஆனால் அரசியல் பிழைப்புக்காக சில கட்சிகளின் தலைவர்கள் தாங்களும் தலைவர்கள் என்று காட்டிக்கொள்வதற்காக சில அநாதை தலைவர்கள், சில அப்பாவி தலைவர்கள் இந்த பிரச்சனையில் அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், நம்முடைய தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக நல உரிமை பேரவை சார்பில் பேரணிகள் நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார் என்று ஸ்டாலின் கூறினார்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருப்பதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக பாடுபடும் தலைவர்களில் கருணாநிதிதான் முதல் இடத்தில் உள்ளதாகவும், சட்டமன்றத்தில் இலங்கை தமிழர்களை காப்பாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததையும் அவர் குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென்பது பற்றிதான் அதிக நேரம் பேசப்பட்டது. இதில் அனைத்து கட்சிகளுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
1956ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் இலங்கை தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்; அவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை முன்மொழிந்தவரே கருணாநிதிதான் என்றார் ஸ்டாலின்.
இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மக்களிடம் எடுத்துச் செல்வதுடன் தொடர்ந்து நாம் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவோம் என்றார் அவர்.