இலங்கைப் பிரச்சினைக்கு மத்திய அரசின் மூலமே தீர்வு

ஞாயிறு, 8 பிப்ரவரி 2009 (11:09 IST)
இலங்கை தமிழர் பிரச்சினையை மத்திய அரசு மூலமாகவே தீர்க்க முடியும் என்று திமுக பொதுச் செயலாளரும், மாநில அமைச்சருமான க. அன்பழகன் கூறியிருக்கிறார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு மூலமாக இலங்கை அரசுக்கு நிர்பந்தம் அளிப்பதைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை என்று கூறினார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தி.மு.க-வின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்பிரச்சனையில் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திமுக விலக்கிக் கொள்ளவேண்டும் என்று சில கட்சிகள் கோரி வருவது பற்றி குறிப்பிட்ட அன்பழகன், மத்திய அரசிலிருந்து விலகினால் மட்டும் இப்பிரச்சனை தீர்ந்து விடுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஜனநாயக ரீதியாக தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருவதாக இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே வி தங்கபாலு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்