இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முன்பு சாலை மறியல் செய்த வழக்கறிஞர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று 4வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அத்துடன் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் என்.எஸ்.சி.போஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மாநகர பேருந்து ஒன்றை தடுத்து நிறுத்தி அதிலிருந்த பயணிகளை இறக்கிவிட்டு அப்பஸ்சை பின்னோக்கி போகச் செய்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதோடு இலங்கை தேசியக் கொடியை தீயிட்டு கொளுத்தினர். இச்சம்பவத்தால் என்.எஸ்.சி.போஸ் சாலை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர்ந்து வழக்கறிஞர்கள் பிராட்வே சாலையில் திறந்திருந்த சைக்கிள் கடையை அடித்து உடைத்தனர். அந்தவழியாக வந்த இருசக்கர வாகனம், கார்களை வழிமறித்து திரும்பப் போகச் சொல்லியும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள் நடத்திய இப்போராட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து திருப்பினர். இதையடுத்து காவல்துறை இணை ஆணையர் ராமசுப்பிரமணி, பூக்கடை துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சிம்கா ஆகியோர் தலைமையில் காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து வழக்கறிஞர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் போராட்டம் மேலும் தொடர்ந்ததால் வழக்கறிஞர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.