நாகர்கோவிலில் இன்று இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை அதிபர் ராஜபக்சே உருவபொம்மையும், அந்த நாட்டு தேசியக் கொடியும் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ராஜபக்சேவின் உருவபொம்மையையும், இலங்கை அரசின் தேசியக் கொடியையும் எரித்தனர்.
இதையடுத்து உருவபொம்மை எரித்த 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.