இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் சிங்கள அரசின் இனப்படுகொலையை கண்டித்தும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழகத்தில் இன்று வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.
இதனிடையே வேலூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அலுவலகம் மீது அடையாளம் தெரியாத சிலர் தாக்கியுள்ளனர். இதில் அலுவலக ஜன்னல், கதவு உடைந்தது.
இதைத் தொடர்ந்து அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையினரிடம், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் சன்னிபோஸ் தான் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டார் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் கொடுத்தனர்.
காங்கிரசார் கொடுத்த புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டதால், சாலை மறியலை காங்கிரசார் கைவிட்டனர்.
இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த சன்னிபோசை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.