வைகோவும், திருமாவளவனும் சுய விளம்பரம் தேடுகின்றனர்: தங்கபாலு குற்றச்சாற்று
புதன், 4 பிப்ரவரி 2009 (13:04 IST)
இலங்கைத் தமிழர்களை காக்க அனைத்து முயற்சியும் மேற்கொள்வோம் என்றும், வைகோ, திருமாவளவன் ஆகியோர் இந்த பிரச்சனையை திசை திருப்பி அரசியலில் தங்களை நிலை நிறுத்தி கொள்ளவும், சுய விளம்பரத்தால் தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு குற்றம்சாற்றியுள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு இல்லாமல் இலங்கைத் தமிழ் மக்களை காக்க முடியாது. தனித்தனியே தலைவர்கள் செயல்படுவதை விட்டு இலங்கைத் தமிழர்களை காக்க முன்வர வேண்டும். இலங்கைத் தமிழர்களை காக்க மாநில அரசு வழியாக தலைவர்களும் இணைந்து செயல்பட்டு மத்திய அரசு மூலம் அரசியல் தீர்வு காண முன்வரவேண்டும்.
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்று உறுதியான நடவடிக்கை எடுத்தார். இதனால் தான் 48 மணி நேரம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் சிலர் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் உருவ பொம்மைகளை எரிக்கிறார்கள். மத்திய அரசை சாடுவதால் ஒன்றும் செய்து விட முடியாது. மத்திய- மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மத்திய அரசு இலங்கைத் தமிழர்களை காக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறது. மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது.
தமிழக மாணவர்களையும், சில வழக்கறிஞர்களையும் சிலர் தூண்டிவிட்டு மத்திய- மாநில அரசுக்கு எதிராக பேசிவருகின்றனர். மாணவர்களும், வழக்கறிஞர்களும் அவரவர் பணியில் தொடர வேண்டும். ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இந்த பிரச்சனையை திசை திருப்பி அரசியலில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள முயற்சிக்கின்றனர். சுய விளம்பரத்தால் தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இலங்கைக்கு மத்திய அரசு ராணுவ உதவிகளை செய்யவில்லை. தமிழகத்தில் சிலர் உண்மைக்கு புறம்பாக பிரசாரம் செய்து வருகின்றனர். கடந்த 50 வருட காலமாக பல வகையில் இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. ஆனால் தற்போது ராணுவ உதவிகளை செய்யவில்லை. சீனாவில் இருந்தும், பாகிஸ்தானில் இருந்தும், இஸ்ரேலில் இருந்தும் தான் ராணுவ உதவிகள் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்களை காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று தங்கபாலு கூறினார்.