ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இன்று மாநிலம் தழுவிய பொதுவேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் ஆளும் தி.மு.க., இதற்கு அனுமதி தரவில்லை. மாறாக முழு அடைப்பு போராட்டத்தில் அரசு உடமைகளுக்கு தீங்கு விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது.
webdunia photo
WD
இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் முழு ஆதரவு தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் எந்த கடைகளும் திறக்கவில்லை. பெரும்பாலான கடைகள் திறக்காமல் பூட்டியே இருந்தது.
ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், சென்னிமலை, காங்கேயம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கினாலும் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வெறிசோடி காணப்பட்டது. தினசரிசந்தைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தது.
கிராம புறங்களில் உள்ள கடைகளையும் அடைத்து இலங்கைத் தமிழர்கள் மீது தங்களுக்குள்ள பாசத்தை வெளிப்படுத்தினர்.