'பந்த்' சட்ட விரோதமானது: த‌மிழக அரசு கடித‌ம்

புதன், 4 பிப்ரவரி 2009 (09:37 IST)
த‌மிழக‌த்‌‌தி‌ல் இன்று நடத்தப்படும் பொது வேலைநிறுத்தம் சட்ட விரோதமானது என்று சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பெயரால் இன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு குறித்து அந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்துகிற கட்சிகளுக்கு தமிழக அரசு தலைமைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், பிப்ரவரி 4ஆ‌ம் தேதியன்று (இன்று) இலங்கை‌த் தமிழர் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடத்த தங்கள் கட்சியின் பெயரால் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். எந்த நோக்கத்திற்காக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டாலும், அதை நடத்தக்கூடாது என்று ஏற்கனவே உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அது தொடர்பாக இப்போதும் அமைச்சர்கள், அதிகாரிகள் மீதே உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள். இந்த விவரங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.

இப்போது நீங்கள் நடத்துவதாக அழைப்பு விடுத்திருக்கும் முழு அடைப்பு என்பதன் நோக்கம் நல்ல நோக்கத்தை முன்னிட்டு என்று இருந்தாலும், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் முழு அடைப்பு நடத்துவதையே சட்ட மீறல் என்ற பொருளில் தடுத்து நிறுத்தியிருப்பதாலும், அந்த வழக்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் முடியாதிருக்கும் நிலையில், நீங்கள் அறிவித்துள்ள 4ஆ‌ம் தேதி முழு அடைப்பு சட்ட விரோதமானது என்று எச்சரிக்கப்படுகிறது எ‌ன்று கடி‌த்‌தி‌ல் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்