பயிற்சி‌க்கு வந்த இலங்கை விமானப்படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

புதன், 4 பிப்ரவரி 2009 (09:19 IST)
சென்னை தாம்பரம் விமானப்படை மையத்திற்கு பயிற்சி பெற வந்த இலங்கை விமானப்படையினர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது.

இததொடர்பாக தமிழக அரசு நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பி‌ல், இலங்கை விமானப்படை வீரர்கள் சிலர் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி கூடத்திற்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்கு பதிவு வழங்குமாறும் தாம்பரம் விமானப்படையினர் சேலையூர் காவ‌ல் நிலையத்தை கேட்டுக்கொண்ட செய்தி முதலமைச்சர் கருணாநிதிக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவரது அறிவுரையின்படி, தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி மத்திய அரசின் பாதுகாப்பு துறையுடன் தொடர்புகொண்டு, அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அந்த இலங்கை விமானப்படை வீரர்களை தமிழகத்திலிருந்து திரும்ப அனுப்ப உத்தரவிட்டதுடன் அந்த செய்தியையும் முதலமைச்சருக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்