இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்தும், போரை நிறுத்த வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 2வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கமும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமும் கடந்த 30ஆம் தேதி முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2வது நாளாக இன்றும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆவின் பாலகம் அருகே வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரத்தில் சங்க தலைவர் பால் கனகராஜ், ஈழமக்கள் பாதுகாப்பு வழக்கறிஞர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் இளந்திரையன், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை தலைவர் கே.பாலு, வழக்கறிஞர்கள் ரஜினி, விஜயேந்திரன், தமயந்தி, அறிவழகன், காசிநாதபாரதி, சமத்துவ மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி செயலர் கினி லியோமானுவேல் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
உண்ணாவிரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மலரஞ்சலி செய்யப்பட்டது. வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தினால் 3வது நாளாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு முழு ஒத்துழைப்பு தரும்படி என்.எஸ்.சி. சாலையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வழக்கறிஞர்கள் குழுவினர் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்தனர்.