சிங்கள அரசு இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பது தமிழினத்தையும் சர்வதேசத் சமூகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கையே என்று தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இலங்கையில் நிரந்தரப் போர் நிறுத்தத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழர்களை வெளியேற்றுவதற்கென 48 மணி நேரம் ஒரு இடைக்காலப்போர் நிறுத்தம் செய்வதாக சிங்கள அரசு அறிவித்துள்ளது. இது ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்னும் மனிதநேய அக்கறையோடு அறிவிக்கப்பட்டதாக ஒரு நாடகத்தை சிங்கள - இந்திய அரசுகள் கூட்டுச் சேர்ந்து நடத்துகின்றன.
இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கருணையால் இந்தப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் இந்திய ஆட்சியாளர்கள் ஏய்க்கப் பார்க்கின்றனர். ஐ.நா. பேரவை உள்ளிட்ட சர்வதேசச் சமூகம் சிங்கள-இந்தியப்படையினரின் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கிய பிறகு இந்த நாடகத்தைத் தற்போது அரங்கேற்றுகின்றனர்.
48 மணி நேரம் கெடு விதித்த பின்னரும் தமிழர்கள் யாரும் வெளியேறவில்லை என்பதால் அவர்கள் பொதுமக்கள் அல்லர். அனைவருமே புலிகள்தான் என முத்திரை குத்தி பொதுமக்களைக் கொன்று குவிப்பதற்குரிய சாக்குப் போக்குகளைச் சொல்லவே இந்த இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
மேலும் கூடுதலான ஆயுதங்களையும் படையினரையும் ஒருசேரக் குவித்து கொடூரமான இடைவிடாத தாக்குதல்களை நடத்துவதற்காகவே இந்த இடைநிறுத்தத்தை சிங்கள- இந்திய அரசுகள் செய்துள்ளன. சர்வதேச சமூகம் இந்தக் கூட்டுச் சதியை உணர்ந்து ஒரு நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.
சிங்களப் படையினரை நம்பி முல்லைத் தீவில் சிக்கியிருக்கும் தமிழர்கள் ராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. இளம் ஆண்களையும் பெண்களையும் வெள்ளை வேனில் கடத்திச் சென்று கொடூரமான வதைகளைச் செய்து கொன்று புதைத்து வருகின்றனர். சிங்களப்படையினர் என்கிற நிலையில் எவ்வாறு தமிழர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முடியும்.
அண்மையில் பாதுகாப்பு வளையம் என சிங்களப் படையினர் அறிவித்த பகுதிக்கு நகர்ந்து வந்த பொதுமக்கள் மீது ஈவிரக்கமின்றி நூற்றுக்கணக்கானவர்களைக் குண்டுவீசிப் படுகெலை செய்தனர். இவ்வாறான நிலையில் பொதுமக்கள் சிங்கள இனவெறியர்களின் அறிவிப்பை நம்பி புலிகளின் பாதுகாப்பிலிருந்து வெளியேற வாய்ப்பே இல்லை. இது சிங்கள- இந்திய ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும் இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பது தமிழினத்தையும் சர்வதேசத் சமூகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கையே ஆகும். எனவே ஒரு நிரந்தரப் போர் நிறுத்தத்தைச் செய்து போர் நிறுத்தத்துக்குரிய ஏற்பாடுகளைச் செய்ய சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என்பதே தமிழ்ச் சமூகத்தின் விருப்பமாகும் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.