பத்திரிக்கையாளர்கள் படுகொலை: ராஜபக்ச அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

புதன், 28 ஜனவரி 2009 (19:50 IST)
இலங்கையில் தமிழ் மக்களின் மீது சிறிலங்க இராணுவம் நடத்திவரும் இனபபடுகொலையை கண்டித்து எழுதும் பத்திரிக்கையாளர்களை அதிபர் ராஜபக்ச அரசு கொன்று வருவதைக் கண்டித்து சென்னையில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

WD
‘போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள்’ எனும் பெயரில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று மதியம் நடந்தது.

பல நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறிலங்க அதிபர் ராஜபக்சவையும், அவருடைய சகோதரரும், பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்சவையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

WD
உலகப் பத்திரிக்கையாளர்களே ஒன்று சேருங்கள், ராஜபக்ச அரசை கண்டியுங்கள்; பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்காதே; அப்பாவிகளைக் கொல்ல அரசாங்கமா? ஆட்களைக் கடத்த இராணுவமா?; ராஜபக்சவின் ஆட்சியில் மட்டும் 16 பத்திரிக்கையாளர்கள் கொலை, 12 பேர் கடத்தல், 4 பேர் காணவில்லை, 22 பேர் கைது; மகிந்த ராஜபக்ச - நவீன ஹிட்லர், பாசிஸ்ட், இனவெறியன்; இலங்கையில் நாங்கள் வாழ்வுரிமையை கோருகிறோம்; கருத்துச் சுதந்திரத்தை கோருகிறோம் என்று எழுதப்பட்டிருந்த தமிழ், ஆங்கில அட்டைகளை பத்திரிக்கையாளர்கள் உயர்த்திப் பிடித்தவாறு முழக்கங்கள் எழுப்பினர்.

உண்மையை உலகிற்குச் சொன்ன பத்திரிக்கையாளர்களுக்கு என்ன ஆனது என்று கூறும் பதாகையில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் படங்கள் பெயர்களுடன் இருந்தது.

WD
மூத்த பத்திரிக்கையாளர்கள் நக்கீரன் கோபால், ஏ.என். பன்னீர் செல்வம் ஆகியோர் பேசினர். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த பத்திரிக்கையாளர் சுனந்தா, இலங்கையில் பத்திரிக்கைகள் எந்த அளவிற்கு நசுக்கப்படுகின்றன என்பதையும், பத்திரிக்கையாளர்கள் எந்த அளவிற்கு மிரட்டிலிற்கு ஆளாகின்றனர் என்பதையும், கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அரசின் தவறான நடவடிக்கைகளை துணிவுடன் எதிர்த்து எழுதியதையும் எடுத்துரைத்தார்.

WD
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ராஜபக்ச அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பத்திரிக்கைச் சுதந்திரத்தை தொடர்ந்து நசுக்கிவரும் ராஜபக்ச அரசைக் கண்டித்து அடுத்த கட்டப் போராட்டம் விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.