3 நாளில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு: ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு தாக்கீது
இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்பட்ட நிதி பற்றி முதலமைச்சர் கருணாநிதி மீது அவதூறு பரப்பிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு தாக்கீடு அனுப்பியுள்ளது. மேலும் 3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி சார்பில் தமிழக அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள தாக்கீதில், ''கடந்த 22.1.09 அன்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் என்ற முறையில் நீங்கள் இலங்கை பிரச்சனை தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறீர்கள். அதில் எங்கள் கட்சிக்காரர் (கருணாநிதி) இலங்கை தமிழர்களுக்காக நிவாரண உதவிகள் திரட்டியது பற்றி குறிப்பிட்டு தவறான முறையில் விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். இந்த நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைந்ததாக தகவல் இல்லை என்றும் கூறி இருக்கிறீர்கள்.
நிவாரண உதவி தொடர்பாக மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பி இருப்பதுடன் எனது கட்சிக்காரரை அவதூறு செய்யும் வகையில் உங்கள் அறிக்கை உள்ளது. இந்த நிதி எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது பற்றி 25.1.09 அன்று எனது கட்சிக்காரர் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அதில் நிவாரண உதவி திரட்டப்பட்டது பற்றிய அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு அதன் கணக்கு வழக்குகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறீர்கள். உங்களுக்கு அரசு பணிகள் எப்படி நடக்கும், இது போன்று திரட்டப்படும் நிதிகள் எப்படி கணக்கில் வைத்து கொள்ளப்படும் என்பதும் தெரியும். இந்த நிதிகள் அனைத்துமே காசோலைகள் மூலமே திரட்டப்பட்டது. ரூ.64,080 மட்டுமே ரொக்க பணமாக வந்தது. அவை முறையாக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் உள்நோக்கத்தோடு எங்கள் கட்சிக்காரர் மீது புகார் கூறி அறிக்கை வெளியிட்டு இருக்கிறீர்கள்.
இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் அனைத்தும் செஞ்சிலுவை சங்கம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் எந்த பொருட்களையோ, உதவிகளையோ வெளியே எடுக்க வாய்ப்பு இல்லை. நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை நிதி திரட்டப்பட்டுள்ளது.
அப்போது இதற்கான அரசு எந்திரங்கள் எப்படி செயல்படும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் வேண்டும் என்றே தவறான அறிக்கையை வெளியிட்டு எனது கட்சிக்காரரை அவதூறு செய்து இருக்கிறீர்கள். அரசு அதிகாரிகளையும் அவமதித்து இருக்கிறீர்கள். திட்டமிட்டே இதை நீங்கள் செய்துள்ளீர்கள்.
இதன் மூலம் உங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த தாக்கீதை பார்த்ததும் நீங்கள் 3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது அவதூறு வழக்கும், கிரிமினல் வழக்கும் பதிவு செய்வதுடன் மானநஷ்ட ஈடும் கேட்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.