தாராபுரம் அருகே விஷம் கலந்த தண்ணீர் குடித்த 30 ஆடுகள் சாவு
புதன், 28 ஜனவரி 2009 (11:20 IST)
தாராபுரம் அருகே விஷம் கலந்த தண்ணீரை குடித்த 30 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. தண்ணீரில் விஷம் கலந்த மர்ம மனிதரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குள்ளக்காளிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவர் தன் தோட்டத்தில் 50 செம்மறி ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். நாள்தோறும் அப்பகுதியில் உள்ள வலசன் தோட்டத்தில் ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.
அங்குள்ள தொட்டியிலேயே தண்ணீரையும் ஆடுகளுக்கு குடிக்கவைத்து மாலையில் தன் தோட்டத்தில் உள்ள பட்டிக்கு அழைத்து வருவார். நேற்று தனது ஆடுகளில் இருபதை பட்டியில் அடைத்துவிட்டு முப்பது ஆடுகளை மட்டும் மேய்ச்சலுக்கு ஓட்டிசென்றார். அங்கு வழக்கம்போல் ஆடுகள் மேய்ந்துவிட்டு தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தது.
இதனால் பதற்றமடைந்த சுப்பிரமணி கால்நடை மருத்துவரை அழைத்துவந்து பரிசோதனை செய்தார். பரிசோதனை செய்த மருத்துவர் ஆடுகள் குடித்த தண்ணீரில் ஆர்கானிக் பாஸ்பிரஸ் என்ற விஷம் கலந்துள்ளதாக கூறினார். இது குறித்து ஊதியூர் காவல்நிலையத்தில் சுப்பிரமணி புகார் செய்தார்.
புகாரின் பெயரில் தண்ணீரில் விஷம் கலக்கிய மர்ம மனிதரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.