போரை ‌நிறு‌த்த பிரணாப்பை வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம்: கருணா‌நி‌தி‌க்கு ராமதாஸ் கோ‌ரி‌க்கை

புதன், 28 ஜனவரி 2009 (13:37 IST)
தமிழர்கள் எல்லோரும் விரும்புகின்ற, உலக நாடுகளெல்லாம் வலியுறுத்துகின்ற சண்டை நிறுத்த அறிவிப்போடு தாயகம் திரும்பி வாருங்கள் என்று அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜியை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வலியுறுத்த வேண்டும் எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ஜனவரி 27 உலகம் முழுவதும் இனப்படுகொலை எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டுள்ளது. இனம், சமூகம் மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கேயாவது, சண்டை நடந்தால் அதை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்; எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று ஐ.நா சபை கட்டளையிட்டிருக்கிறது. அதன் அங்கமாக விளங்கும் இந்தியாவின் எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில், தமிழினப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது.

சண்டையை நிறுத்து என்று உலக நாடுகள் எல்லாம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழகமும் கொந்தளித்து ஓங்கி குரல் கொடுத்து வருகிறது. அய்யகோ- இலங்கையில் தமிழினம் அழிகிறது. இன்றே போர் நிறுத்தம்; அடுத்து அரசியல் தீர்வு, தொடர்ந்து அமைதி என்ற நல்ல விளைவை எதிர்பார்த்து இந்திய பேரரசுக்கு இறுதி வேண்டுகோள் என்று சட்டப்பேரவையில் கடைசி முறையாக தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறோம்.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை

நீண்ட தாமதத்திற்கு பிறகு இந்திய அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் கொழும்பு செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது பயணத்தால், போர் நிறுத்தம் வருமா? தமிழினப்படுகொலை தடுத்து நிறுத்தப்படுமா? என்று உலக தமிழர்கள் எல்லாம் ஏக்கத்தோடு எதிர்பார்த்து காத்து நிற்கிறார்கள். ஆனால், போரை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்துவதற்காக கொழும்பு செல்கிறேன் என்று அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் அறிவிக்காதது ஏமாற்றமாக இருக்கிறது.

பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை காக்கவே இலங்கை செல்கிறேன் என்று கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்னர் அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் அறிவித்ததாக செய்திகள் வருகின்றன. சண்டை நிறுத்தப்பட்டால்தானே அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற முடியும். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. கொழும்பில் அவர் 2 நாட்கள் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு புறப்படுவதற்கு முன்னர் நமது முதலமைச்சருடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

எனவே அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் கொழும்பில் இருந்தாலும் அவருடன் முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழர்கள் எல்லோரும் விரும்புகின்ற, உலக நாடுகளெல்லாம் வலியுறுத்துகின்ற சண்டை நிறுத்த அறிவிப்போடு தாயகம் திரும்பி வாருங்கள் என்று வலியுறுத்த வேண்டும். அது ஒன்றுதான் தமிழகத்திற்கு மன நிறைவை தரும் என்று எடுத்து கூற வேண்டும்.

இலங்கையில் நடைபெற்றுவரும் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், அதற்கு காரணமான சண்டையை நிறுத்த இந்திய பேரரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். யாராலும் தூண்டிவிடப்படாமலேயே தமிழின உணர்வால் உந்தப்பட்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

மாணவர்களின் போராட்டம் என்றைக்குமே தோற்றதில்லை

மாணவர்களின் போராட்டம் உலகெங்கும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய வரலாறு இருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், மாணவர்கள் நடத்திய கிளர்ச்சியின் விளைவாகத்தான் இன்றைக்கு அங்கே பல நாடுகளில் மக்கள் ஜனநாயக சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் மாணவர்கள் நடத்திய போராட்டமும், இயக்கமும்தான் 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வர காரணமாக அமைந்தது சீனாவிலும், இன்றைக்கு சுதந்திர காற்று வீசுகிறது என்றால், அதற்கு மாணவர்கள் நடத்திய போராட்டம்தான் காரணம்.

நமது தமிழகத்திலும், 1965ஆம் ஆண்டில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் கட்டாய இந்தி தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே மாணவர்கள் இப்போது, நடத்தும் போராட்டம் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த உதவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. மாணவர்களின் போராட்டம் என்றைக்குமே தோற்றதில்லை.

தமிழின அழிப்பை எதிர்த்து நடத்துகின்ற இந்த போராட்டத்தில் மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அதே நேரத்தில் அமைதியான முறையில் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும். வன்முறைக்கு துளியும் இடம் கொடுக்கக் கூடாது. மாணவர்களின் இந்த இன உணர்வு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும் எ‌ன்று ராமதா‌‌ஸ் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌‌ர்.