முன்னாள் குடியரசு தலைவர் வெங்கட்ராமன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
புதன், 28 ஜனவரி 2009 (10:29 IST)
முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கடராமன் மறைவுக்கு ஆளுநர் பர்னாலா, முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
webdunia photo
FILE
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா : முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஆர்.வெங்கடராமன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர் பலதுறைகளில் வல்லுனராக திகழ்ந்தார். பல்வேறு உயர் பதவிகளில் வகித்த அவர் நாட்டில் தொழில் புரட்சியை ஏற்படுத்தினார். அவருடைய மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
webdunia photo
FILE
முதலமைச்சர் கருணாநிதி : ஆர்.வெங்கடராமன் நாட்டு அரசியலிலும், இந்திய தேசிய அரசியலிலும் தனியொரு வரலாறு படைத்தவர். அவரது மறைவு ஜனநாயகத்துக்கு பெரும் இழப்பாகும். அவரது பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
webdunia photo
FILE
அ.இ.அ.தி.மு.க.பொதுச்செயலர் ஜெயலலிதா : முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கடராமன் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். நாட்டின் விடுதலைப்போராட்ட வீரரையும், உண்மையான தேசபக்தரையும், சிறந்த பாராளுமன்ற வாதியையும், எல்லாவற்றுக்கும் மேலாக மனிதாபிமானமிக்க ஒருவரை இழந்து விட்டோம். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது ஆகும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
webdunia photo
FILE
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு : சட்டமன்ற உறுப்பினராக பணியைத்தொடங்கி இந்தியாவின் குடியரசு தலைவர் பதவி வரையில் உயர்ந்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தார். வழக்கறிஞர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, ஆன்மீகவாதி என்பது போன்ற போற்றத்தக்க பரிமாணங்களோடு வளர்ந்து 98 வயது வரை மங்காப்புகழோடு வாழ்ந்த அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவரது மறைவால் தமிழ்நாடு காங்கிரஸ் பெரிதும் துயர் அடைகிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
webdunia photo
FILE
ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ : ஆர்.வி.என்ற இரண்டு எழுத்துக்களால் அனைவராலும் மதிப்போடு அழைக்கப்பட்ட ஆர்.வெங்கட்ராமன், இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு சிறைசென்றவர். தியாக வாழ்வை ஏற்றவர். தமிழகத்தின் தொழில் அமைச்சராக பொறுப்பேற்று நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உள்பட பல பெருந்தொழில் நிறுவனங்கள் அமைவதற்கும், தமிழகத்தில் தொழில் வளம் பெருகுவதற்கும் அடித்தளம் அமைத்தவர். இந்தியாவின் ஜனநாயகம் தழைக்கப்பாடுபட்ட ஆர்.வி.யின் மறைவு பேரிழப்பு ஆகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு ம.தி.மு.க.சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
webdunia photo
FILE
முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் : தஞ்சை மாவட்டத்தில் பிறந்து பெருந்தலைவர் காமராஜரின் அமைச்சரவையில் சிறப்பு மிக்க பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பேற்று தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு காரண கர்த்தாவாய் அமைந்தவர். மத்திய நிதி அமைச்சர் உள்பட பல்வேறு துறைகளில் பொறுப்பேற்று நாடு முழுவதிற்கும் தொண்டு செய்தவர். துணை குடியரசு தலைவராக, நாட்டின் மிக உயர்ந்த குடியரசு தலைவராக பொறுப்பேற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர். கண்ணியமானவர், நாணயமானவர், மிகச்சிறந்த நிர்வாகி என்று போற்றப்பட்ட ஆர்.வெங்கடராமன் மறைவுக்கு பா.ஜ.க.சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலர் என்.வரதராஜன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.ஷேக்தாவூத் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.