சென்னை வந்த அல்-உம்மா தீவிரவாதி கைது

செவ்வாய், 20 ஜனவரி 2009 (16:12 IST)
தடை செய்யப்பட்ட அல்-உம்மா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஹாரூன் இஸ்மாயில் (வயது 32) என்பவரை சென்னையில் விமான நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.

துபாயில் இருந்து பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக இஸ்மாயில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவரைக் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், சிபிசிஐடி கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையிலான சிறப்புப் படையினர் விமான நிலையத்தில் காத்திருந்து, இஸ்மாயிலைக் கைது செய்ததாக அவர்கள் கூறினர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாஜக தலைவர் ஒருவருக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய வழக்கில் இஸ்மாயிலுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர் துபாய்க்கு தப்பியோடி விட்டார்.

இந்நிலையில் தனது பாஸ்போர்ட் காலாவதியானதைத் தொடர்ந்து அதனை புதுப்பிப்பதற்காக ஹாரூன் இஸ்மாயில் சென்னை வந்தார். அப்போது காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டார்.

பின்னர் அவரைக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்