தொடர்ந்து நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் உடலில் ஏற்பட்ட சோர்வுக்கு சிகிச்சை பெறுவதற்காக விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
webdunia photo
FILE
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையை அடுத்த மறைமலைநகரில் கடந்த 15ஆம் தேதி தொல். திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து நேற்றிரவு 7 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை திருமாவளவன் முடித்துக்கொண்டார். 4 நாட்கள் பட்டினி அறப்போர் நடத்தியதால் உடல் சோர்வுடன் காணப்பட்ட திருமாவளவன் நேற்றிரவு 10 மணியளவில் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினர். அதன்படி திருமாவளவனுக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று மாலை அல்லது நாளை காலை திருமாவளவன் வீடு திரும்புவார் என்று தெரிகிறது.