மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
சென்னை ராயப்பேட்டை அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை ஜெயலலிதா வெளியிட்டார். முதல் பிரதியை பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு உயிரிழந்த 29 அ.இ.அ.தி.மு.க.வினரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியை ஜெயலலிதா வழங்கினார்.
விழாவில் அவைத் தலைவர் மதுசூதனன், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமை கழக நிர்வாகிகள் சு.முத்துசாமி, தளவாய்சுந்தரம், பொள்ளாச்சி ஜெயராமன், தம்பிதுரை, லியாகத் அலிகான், எஸ்.டி.கே. ஜக்கையன், சுலோச்சனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன், வளர்மதி, கோகுலஇந்திரா உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
சென்னை கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தியாகராயநகர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவசிலைக்கு, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பா.ஜ.க. தேசிய செயலர் திருநாவுக்கரசர், ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில், கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.