கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்தது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது.
இந்த ஆண்டு பொங்கலையொட்டி இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவங்கியது. அங்குள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் காளை முதலில் விடப்பட்டது. அதன் பிறகு மற்ற காளைகள் விடப்பட்டன.
200-க்கும் மேற்பட்ட காளைகளும், அவற்றை அடக்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் குவிந்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் சீறிபாய்ந்து வந்தன. அந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் அங்கு அழைத்து வரப்பட்டுள்ளன.
திரும்பிய திசையெல்லாம் ஜல்லிக்கட்டு காளைகள் திரிகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக் கோரி இந்திய விலங்குகள் நல அமைப்பின் சார்பில் அண்மையில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இதுவரை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் திட்டமிட்டப்படி போட்டி நடைபெறும் என்று ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.