ஈழத் தமிழர்கள் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு வைகோ கடிதம்

செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:26 IST)
முல்லைதீவில் மரணத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் ஆறு லட்சம் ஈழத்தமிழர்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள் எ‌ன்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு எழு‌தியு‌ள்ள கடிதத்தில், இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம், செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கலைத்துறையினர், இலக்கியத்துறையினர் ஊர்வலங்கள், அறப்போராட்டங்கள், மனிதசங்கிலிகள் நடத்தியும் இந்திய அரசு அவற்றை அவமதித்து அலட்சியம் செய்தது.

மாறாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இலங்கைக்கு தொடர்ந்து ராணுவ ரீதியான உதவிகளை செய்து வருகிறது. உலககெங்கும் உள்ள தமிழர்களின் சார்பில் உங்களை கரம் கூப்பி, மன்றாடி வேண்டுகிறேன். முல்லைதீவில் மரணத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் ஆறு லட்சம் ஈழத்தமிழர்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உதவியால் ராஜப‌க்சே அரசு நடத்தும் தமிழின கொலையை தடுத்து நிறுத்துங்கள். இந்த நியாயமான கோரிக்கையை நீங்கள் நிராகரித்தால் தமிழர்களும், எங்கள் சந்ததிகளும் இந்திய அரசின் இந்த வஞ்சகமான துரோகத்தை எந்நாளும் மன்னிக்க மாட்டார்கள் கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.