சென்னையில் இருந்து மதுரை, செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
சனி, 10 ஜனவரி 2009 (10:50 IST)
சென்னையில் இருந்து மதுரை, செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெயியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 21ஆம் தேதி மதுரைக்கு சிறப்பு ரயில் (0631) இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 6 மணிக்கு மதுரையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து ஜனவரி 24ஆம் தேதி சென்னைக்கு சிறப்பு ரயில் (0632) இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 26ஆம் தேதி செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் (0617) இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 10 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து ஜனவரி 29ஆம் தேதி சென்னைக்கு சிறப்பு ரயில் (0618) இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது.
இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மதுரை, செங்கோட்டையில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரயில்கள் கூடுதலாக பெரம்பூரில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (10ஆம் தேதி) காலை முதல் தொடங்குகிறது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.