திருமங்கலம் தொகுதியில் தமது கட்சி வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக, அதிமுக கட்சிகளைப் போல் இல்லாமல் தெய்வத்தையும், மக்களையும் நம்பி களமிறங்கியுள்ளதாகக் கூறினார்.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் திமுக சார்பில் லதா அதியமான், அஇஅதிமுக சார்பில் முத்துராமலிங்கம், தேமுதிக சார்பில் தனபாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டியில் இன்று வாக்குசேகரித்தார்.
அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் மட்டும் தான் ஒரு அரசியல் தலைவரை பார்க்கலாம் என்று விஜயகாந்தை மறைமுகமாகத் தாக்கிப் பேசியதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசினார்.
எம்.ஜி.ஆர் காலத்தில் முகவரி இல்லாமல் இருந்தது யார் என்பதை மக்க்கள் அறிவார்கள். திமுக-வைப் பொருத்தவரை அராஜகத்தையும், பண பலத்தையும் நம்பி இத்தேர்தலில் போட்டியிடுகிறது. அதிமுகவோ பணபலத்தையும், கூட்டணி பலத்தையும் நம்பியுள்ளது.
எனது பேச்சைக் கேட்க மக்கள் யாரும் வரக்கூடாது என்று அந்த இரு கட்சியினரும் பணம் கொடுத்துள்ள போதிலும், அதையும் மீறி கூட்டமாக இவ்வளவு பேர் இங்கு வந்துள்ளீர்கள். நான் இந்தத் தேர்தலில் மக்களையும், தெய்வத்தையும் நம்பியுள்ளேன் என்று விஜயகாந்த் கூறினார். அதனால்தான் யாருடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிடுகிறேன் என்றார்.
விஜயகாந்த் தேர்தல் சமயத்தில் மட்டுமே வெளியே வருவார். மற்ற நேரங்களில் அட்ரஸ் இல்லாமல் இருப்பார் என்கிறார்கள்.
யார் அட்ரஸ் இல்லாமல் இருப்பது? தேமுதிக தலைவர் என்ற அட்ரசோடுதான் நான் இருக்கிறேன். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அட்ரஸ் இல்லாமல் இருந்தவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.
திருமங்கலம் தொகுதி மக்கள் தமிழக மக்கள் ஆச்சரியப்படும் வகையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கும் வகையில் தேமுதிகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.