ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த விளக்க நாட்காட்டியை முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.
ஊராட்சித் துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த விளக்க நாட்காட்டி ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நாட்குறிப்பேடு முதலமைச்சர் கருணாநிதியால் இன்று வெளியிடப்பட்டது. முதல் பிரதியினை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
இந்நாட்காட்டியானது ஊரக வளர்ச்சி துறையின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட நாட்காட்டியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட கசிவுநீர் குளம் மற்றும் நூலகம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்பட்ட கால்வாய் தூர்வாரும் பணி, நபார்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் தார்ச்சாலைப் பணி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான போட்டிகள், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தடுப்பணைப் பணி, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டடப் பணி மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பாலப் பணி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்நாட்காட்டி வெளியீட்டு நிகழ்ச்சியின்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் க.அஷோக் வர்தன் ஷெட்டி உடனிருந்தார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.