போரை நிறுத்தும்படி சிங்கள அரசை உடனடியாக எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்
திங்கள், 29 டிசம்பர் 2008 (09:36 IST)
இந்திய பேரரசு தாமதிக்கின்ற ஒவ்வொரு விநாடியும், ஒரு தமிழனின் பிணம் இலங்கையில் வீழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்ப வேண்டும் என்றும் வெறும் பேச்சளவில் மட்டுமின்றி சண்டையை நிறுத்தும்படி எச்சரித்து, அதனை செயலில் சாதித்து வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டில் மட்டும் 700 வான்படைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறோம். ஒவ்வொரு நாளும், 10 போர்ப்படை விமானங்கள் பறந்துபோய்த் தாக்கியிருக்கின்றன. ஒவ்வொரு போர் விமானமும் 4,5 குண்டுகளை வீசியுள்ளன. அவற்றில், சில குண்டுகள் ஒரு டன் அளவுக்கும், வேறு சில குண்டுகள் 500 கிலோ அளவுக்கும் எடை உள்ளவை. இப்படி இலங்கைப் பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஓர் நேர்காணலில் விவரித்திருக்கிறார்.
இரண்டு பகை நாடுகளுக்கு இடையே நடைபெறுகிற சண்டையில் கூட பயன்படுத்த கூடாது என்று சர்வதேச சமூகம் தடை செய்துள்ள கிளஸ்டர் பாம் எனப்படும் கொத்துக் குண்டுகளை இலங்கைப் போர்ப்படை விமானங்கள் வீசி, மனித இனத்துக்கு எதிரான பெரும் குற்றத்தை இழைத்திருக்கின்றன.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் இலங்கை அரசு, உலகம் இதுவரையில் கண்டிராத, மிகப் பெரிய இன அழிப்பு பயங்கரவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கே செத்து மடிந்து கொண்டிருக்கும் தமிழர்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று இந்தியாவை நோக்கி உரிமையோடு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டப்பேரவையில் இரண்டு முறை தீர்மானம், பல முறை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம், எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து, சண்டையை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறோம். வெளியுறவுத் துறை அமைச்சரை கொழும்புக்கு அனுப்புகிறேன் என்று பிரதமர் அளித்த வாக்குறுதி, ஏறக்குறைய ஒரு மாத காலமாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
பிரதமர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத அவகாசத்தைப் பயன்படுத்தி, சிங்கள இனவெறி அரசு நாள்தோறும், தமிழர்களை வேகமாகக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. இதைக் கண்டு தமிழர்கள் எல்லோரும் துடித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வேதனைத் துடிப்பின் எதிரொலிதான், முதலமைச்சர் கருணாநிதியின் கண் கலங்கும் பேச்சு.
நாம் விரும்புகின்ற அளவுக்கு, நாம் படுகின்ற வேதனையைத் துடைக்கின்ற அளவுக்கு வேகமாக முடிவெடுக்காமல் இந்திய பேரரசு தாமதிக்கின்ற காரணத்தினால் ஒவ்வொரு விநாடியும், ஒரு தமிழனின் பிணம் இலங்கையில் வீழ்ந்து கொண்டிருக்கிறது என்றும், அதைத் தடுத்திட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லியை நோக்கி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது தனிப்பட்ட ஒருவரின் வேண்டுகோள் அல்ல, முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஏழரை கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோள் இது. இதை இந்திய பேரரசு அலட்சியப்படுத்த கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால், இனியும் தாமதப்படுத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அவர்கள் மதிக்கவில்லை, தமிழர்களை மதிக்கவில்லை, அலட்சியப்படுத்துகிறார்கள் என்றுதான் தமிழர்கள் அனைவரும் கருதுவார்கள்.
இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவேண்டிய மிகப் பெரிய கடமை, இந்திய பேரரசுக்கு இருக்கிறது என்பதை உரிமையோடு வலியுறுத்துகிறோம். இதில், தமிழர்கள் எல்லோரும் விரும்புகின்ற அளவுக்கு அவசரம் கூட வேண்டாம். மெதுவாக நடவடிக்கை எடுத்திருந்தாலே இந்நேரம் இலங்கையில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
அது நடைபெற்றிருந்தால், குறைந்தபட்சம் கடந்த ஒரு மாத காலத்தில் செத்து மடிந்த இலங்கைத் தமிழர்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். இந்திய பேரரசு இனியும் காலம்தாழ்த்தாமல், நடவடிக்கை மேற்கொண்டு, இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலைக்குக் காரணமான சண்டையை நிறுத்தவேண்டும்.
இதற்கு உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்ப வேண்டும். வெறும் பேச்சளவில் மட்டுமின்றி சண்டையை நிறுத்தும்படி எச்சரித்து, அதனை செயலில் சாதித்து வரவேண்டும். இதுவே இங்குள்ள ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஏக்கமாகும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.