திண்டிவனம்-நகரி இடையே 22 ரயில் நிலையங்கள் - வேலு

ஞாயிறு, 28 டிசம்பர் 2008 (16:55 IST)
திண்டிவனம் - நகரி இடையே புதிதாக அமைக்கப்படும் அகல ரயில் பாதையில் 22 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலு கூறியிருக்கிறார்.

சோளிங்கர் கொண்டாபாளையம் அருகே புதிய ரயில் நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசிய அவர், திண்டிவனம்- நகரி புதிய அகல ரயில் பாதை திட்டத்துக்கு 715 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மொத்தம் 179 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் 22 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்காக 500 ஏக்கர் நிலம் கையகபடுத்த வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் ரயில்வே துறை அதிகாரிகள் விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார். ஈரோடு - திருச்சி இடையேயான ரயில் பாதை தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், இதனால் இந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதுடன் பயண நேரமும் குறையும் என்றார் வேலு.

சோளிங்கரில் இருந்து சென்னைக்கு புதிய பேருந்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்