பதவியேற்ற பின்னர் முதன்முறையாக நாளை தமிழகம் வர உள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தற்போது ஆந்திரப் பிரதேசம் தலைநகர் ஹைதராபாத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில், ஒரு நாள் பயணமாக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மதுரை வருகிறார்.
பின்னர் அங்கிருந்து கடற்படை ஹெலிகாப்டர் மூலம் உச்சிபுளி கடற்படை தளத்துக்கு வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோவிலுக்குச் செல்கிறார்.
அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சாமி தரிசனத்திற்குப் பிறகு அன்று மாலையே மீண்டும் அவர் விமானம் மூலம் ஹைதராபாத் திரும்புகிறார்.
குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றப் பின்னர் முதன் முறையாக தமிழகம் வரும் பிரதீபா பாட்டீல் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பிற்காக 1,000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி ராமேஸ்வரம் பகுதியில் மீன் பிடிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இதேபோல், அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.