கோபி அருகே பெண்ணை கொலை செய்து உடலை கீழ்பவானி வாய்க்காலில் வீசி சென்ற மர்ம மனிதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ளது திங்களூர். இதன் அருகே உள்ள பாண்டியாம்பாளையம் அருகே செல்லும் கீழ்பவானி கிளை வாய்க்காலில் சுமார் 30 வயது மதிக்கதக்க பெண் உடல் மிதந்தது. அதை பார்த்தவர்கள் உடனே கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.
கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் திங்களூர் காவல்துறையில் புகார் செய்தார். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் தண்ணீரில் மிதந்து வந்த பெண் உடலை கைப்பற்றினர். அந்த பெண் முகம், கை, கால், மார்பு பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது.
இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்தனர் என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கோபி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுப்பரமணி தலைமையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.