திருமங்கலம் தொகுதியில் 26 பேர் போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு
சனி, 27 டிசம்பர் 2008 (10:16 IST)
மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க., தே.மு.தி.க, ச.ம.க உள்பட 26 வேட்பாளர்கள் போட்டியிடுவது இறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற வேட்புமனு வாபசில் சுயேச்சை வேட்பாளர் (திரைப்பட நடிகர்) ஏ.பி. பரதன் தனது மனுவை வாபஸ் பெற்றார். மேலும், வேட்பாளர்களுக்கான மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த 4 பேரின் மனுக்களும் தகுதியிழப்பு செய்யப்பட்டன. தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு "சின்னங்கள்' ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இது குறித்து தொகுதியின் தேர்தல் அதிகாரியான மதுரை நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் ராமச்சந்திரன் கூறுகையில், திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 36 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 31 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சியை சேர்ந்த மாற்று வேட்பாளர்களது மனுக்களும் வாபஸ் ஆயின. இதன்படி 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழ்அகர வரிசைப்படி இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேட்சைகள் என்று பிரிக்கப்பட்டு வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
முத்துராமலிங்கம் (அ.இ.அ.தி.மு.க.)-இரட்டைஇலை, லதாஅதியமான் (தி.மு.க.)-உதயசூரியன், தனபாண்டியன் (தே.மு.தி.க.)-முரசு, பத்மநாபன் (சமத்துவ மக்கள் கட்சி)-டார்ச்லைட்.
இத்தேர்தலில் மொத்தம் 26 பேர் போட்டியிடுகின்றனர். வரும் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 2 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன் தெரிவித்தார்.