போலியோ சொட்டு மருந்து: தமிழக அரசு மீது ஜெயலலிதா புகார்
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (12:34 IST)
எனது ஆட்சிக் காலத்தில், சொட்டு மருந்து அளிப்பதற்கு முன்பு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தெரிவித்துள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா, தி.மு.க. ஆட்சியில் இது போன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் காரணமாகத்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து தமிழக அரசின் சார்பாக அளிக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவர்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து அளிப்பதற்கான முதல் முகாம் 21.12.2008 அன்று நடைபெற்றது.
இந்த முகாமின் போது, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொடிவேரிமேடு என்ற இடத்தில் சங்கர் என்ற நான்கு மாதக்குழந்தையும், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஏழுமான்திடல் என்ற இடத்தில், மோகன் என்பவரின் ஒன்பது நாள் பெண் குழந்தையும், பெரம்பலூர் மாவட்டம் எசனை என்ற இடத்தில் ஜோதி என்பவரின் ஐந்து மாத ஆண் குழந்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டி-பரிமளம் தம்பதியினரின் ஐந்து மாதக் குழந்தையும், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சின்னகவுண்டன்புதூர் என்ற இடத்தில் சுந்தரம்- கலைமணி தம்பதியினரின் 6 மாதக் குழந்தையும், தருமபுரி மாவட்டம், கடகத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் ஐந்து நாள் குழந்தையும் இதுவரை இறந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
குழந்தைகள் இறந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியவுடன், சொட்டு மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்ற போது, சில மருத்துவமனைகளில் மருத்துவர்களே இல்லை என்றும், சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தும் சிகிச்சை அளிக்க தயக்கம் காட்டியதாகவும், சில பகுதிகளில் ஈவு இரக்கம் இல்லாமல் காவல்துறையினர் பெற்றோர்களை விரட்டி அடித்ததாகவும் செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே இதே ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், பென்னலூர்பேட்டை காலனியில் உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் மூலம் தட்டம்மை ஊசி போடப்பட்ட போது மூன்று அப்பாவி பிஞ்சுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
இது என்ன ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா? ஹிட்லர், முசோலினி ஆட்சிக் காலங்களிலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் தான் இது போன்ற கொடுமைகள் நடைபெற்றதாக நாம் கேள்விபட்டிருக்கிறோம்.
தமிழகத்தை அனைத்துத்துறைகளிலும் பின்னோக்கி அழைத்துச் சென்றது போதாது என்று, கொடுமைப்படுத்துவதிலும் கருணாநிதி தமிழகத்தை பின்னோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் மக்களிடையே பரவலாக உள்ளது.
இதுபோன்ற சம்பவம் நடப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கனவே இதே ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், பென்னாலூர் பேட்டை காலனியில் உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார மையங்களில் பணி புரியும் செவிலியர்கள் மூலம் தட்டம்மை ஊசி போடப்பட்ட போது மூன்று அப்பாவி பிஞ்சுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
இது போன்று சொட்டு மருந்து அளிக்கப்படும் போதோ அல்லது தடுப்பூசி போடப்படும்போதோ சில நடைமுறைகள் கடை பிடிக்கப்படுவது வழக்கம். உதாரணமாக, காய்ச்சல், சளி போன்றவை இருந்தால் சொட்டு மருந்து அளிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். எனது ஆட்சிக் காலத்தில், சொட்டு மருந்து அளிப்பதற்கு முன்பு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதை ஒரு புனிதக் கடமையாக நான் மேற்கொண்டேன்.
தி.மு.க. ஆட்சியில் இது போன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் காரணமாகத்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இளம் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மையாலும், கவனக் குறைவினாலும் தான் ஆறு பிஞ்சுக் குழந்தைகள் இறந்துள்ளன. இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.