சீமான், மணி மீது தேசத் துரோக வழக்கு!

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (20:07 IST)
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ள இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஈரோட்டில் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான், “தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதும், ராஜீவ் காந்தி படுகொலையில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனை தமிழர் தலைவர் என்று புகழ்பாடியுள்ளதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு, அவரை கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள தேவதானப்பட்டி என்ற கிராமத்தில் ‘மாயாண்டி குடும்பத்தார்’ என்ற திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த இயக்குனர் சீமானை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதே நேரத்தில் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் மணியையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் இருவர் மீதும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கை தடுப்புச் சட்டப் பிரிவு 13 (பி) (தேசத் துரோகம்), இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 505 (பொது அமைதியை குலைப்பது) ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்தபோது அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, காங்கிரஸ் கட்சி கொடுத்த நெருக்குதலால் இந்தக் கைது நடந்துள்ளதாகக் கூறினார்.

தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசுவது குற்றமாகாது என்று பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியதை மணி சுட்டிக்காட்டினார்.

ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் எப்படியெல்லாம் சிறிலங்க இராணுவத்தினரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத்தான் எடுத்துக் கூறியதாகவும் மணி தெரிவித்தார்.

சீமான், மணி ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இது தமிழக முதல்வர் கருணாநிதி கடைபிடித்துவரும் இரட்டை நிலையை காட்டுகிறது என்று குற்றம் சாற்றினார்.

சீமானைக் கைது செய்திருப்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழர் தேசிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலர் மணியரசுவை காவல் துறையினர் தேடி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்