சீமான் காரை எரித்த காங்கிரஸ்காரர்களை உடனே கைது செய்ய வேண்டும் : பழ.நெடுமாறன்
தங்கபாலு அறிக்கைக்கு பணிந்து கைது செய்த இயக்குனர் சீமான் உள்பட மூன்று பேரையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்வதுடன், காரைக் கொளுத்திய காங்கிரஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வற்புறுத்தியுள்ளார்.
Puthinam Photo
FILE
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை காங்கிரசை சேர்ந்த சிலர் கொளுத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ள பழ.நெடுமாறன், ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பாசிச வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ்காரர்களை கைது செய்யாமல் சீமான், கொளத்தூர் மணி, பெ.மணியரசன் ஆகியோரை கைது செய்துள்ள தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சீமானை கைது செய்ய வேண்டுமென வெளியிட்ட அறிக்கைக்குப் பணிந்து தமிழக அரசு செயல்பட்டு இருக்கிறது என்று குற்றம்சாற்றியுள்ள பழ.நெடுமாறன், கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன் காரைக் கொளுத்திய காங்கிரஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.