திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது, பழுதடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிடுவது ஆகியவற்றை வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை திருவாரூர் நகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள். இதன் விளைவாக அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த 31 மாத கால மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் முக்கியமான ஆறுகள், வடிகால்களை தூர்வாருவதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தினாலும், ஒதுக்கப்பட்ட நிதியை ஆளுங்கட்சியினர் முறைகேடு செய்ததன் காரணத்தினாலும் நீர்வரத்தைக் கண்காணித்து அதைத் தடுக்கக் கூடிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் எடுக்காததாலும் மாவட்டத்தின் முக்கியமான ஆறுகள், வடிகால்களில் உடைப்பு ஏற்பட்டு வரலாறு காணாத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகியவை வழங்கப்படவில்லை என்றும், தேவையான மருத்துவ வசதி அளிக்காததன் காரணமாக மாவட்டம் முழுவதும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது மட்டும் அல்லாமல் வீடுகளை இழந்தோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிதி போதுமானதாக இல்லை என்றும் நிவாரண உதவிகள் வழங்குவதில் ஆளும் கட்சியினரின் தலையீடு தலைவிரித்தாடுவதாகவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், வெள்ளத்தினால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் கால்நடைகள், மீன் பண்ணைகளுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய இழப்பீடு வழங்குவது, பழுதடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிடுவது ஆகியவற்றை வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க திருவாரூர் மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவையின் சார்பில் நாளை (20ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதி நகராட்சி அலுவலகம் எதிரில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.