கடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குளோரி சந்திராவின் வெற்றியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட தங்கமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குளோரி சந்திரா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது பள்ளி சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்ளது. கிறிஸ்துவராக மாறி இருப்பதால் அவர் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமையை அனுபவிக்க முடியாது. எனவே அவர் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குளோரி சந்திரா அப்பீல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சென்ன உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினராக தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாண்டா, சுதர்சனரெட்டி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், குளோரின் சந்திரா அப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தொடரலாம் என்றும் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.
ஆனால் சட்டப்பேரவை விவாதங்களில் குளோரின் சந்திரா வாக்களிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், சலுகைகள் எதையும் அவர் பெற முடியாது என்று தீர்ப்பளித்தனர்.