இயக்குனர் சீமான் மீண்டும் கைது!

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (19:10 IST)
திண்டுக்கல் அருகே படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது திரைப்பட இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியுள்ள சீமானை கைது செய்யவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தமிழக அரசை வலியுறுத்தியிருந்தார்.

“தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதும், இலங்கைத் தமிழர்களை அழிக்க அமைதிப் படையை ராஜீவ் காந்தி அனுப்பியதாகக் கூறி இந்திய நாட்டை சீமான் கொச்சப்படுத்தியுள்ளார்” என்று கூறி அறிக்கை விடுத்திருந்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சீமானை தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே, ராஜீவ் காந்தி படுகொலையை கொச்சைபடுத்தும் விதமாக சீமான் பேசினார் என்று கூறி இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை மாநகர ஆணையரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

அந்தப் புகாரின் அடிப்படையில்தான் சீமான் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள தேவதானப் பட்டி என்ற இடத்தில் மாயாண்டி குடும்பத்தார் என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த இயக்குனர் சீமானை காவல் துறையினர் கைது செய்தனர்.

எந்தக் குற்றத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் இதுவரைத் தெரியவில்லை.

கடைசி செய்தி:

சீமானைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்