'எந்திரன்' படத்தை சன் டி.வி. நிறுவனம் தயாரிக்கிறது

வியாழன், 18 டிசம்பர் 2008 (12:19 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'எந்திரன்’ படத்தை தயாரிப்பதாக இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் அறிவித்துள்ளது.

webdunia photoFILE
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய சினிமா படம் 'எந்திரன்'. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஷங்கர் இய‌க்கு‌கிறா‌ர்.

'எந்திரன்' படத்தை சன் டி.வி. நெட்வொர்க் குழுமத்தை சேர்ந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ரஜினிகாந்த், இய‌க்குன‌ர் ஷங்கர், சன் டி.வி. நெட்வொர்க்கின் தலைவரு‌ம் நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறன் ஆகியோர் முன்னிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா இந்த தகவலை வெளியிட்டார்.

இது பற்றி ரஜினிகாந்த் கருத்து கூறும்போது, "இது இந்தியாவின் மிகப்பெரிய படம், கலாநிதி மாறனுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' என்றார்.

இய‌க்குன‌ர் ஷங்கர் கூறுகையில், "கலாநிதி மாற‌னி‌ன் சன் பிக்சர்ஸ் உடன் இணைவதில் பெருமைப்படுகிறேன். ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் இந்த படம் சன் டி.வி.யுடன் சேரும்போது, மேலும் பலத்த எதிர்பார்ப்பு கூடும்'' என்றார்.

'எந்திரன்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.