5 வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்தை தவறாமல் போட்டுக் கொள்ளும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இதற்காக 40,399 சிறப்பு மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போலியோவை நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிப்பதற்காக வரும் 21.12.2008 (ஞாயிறு), 1.2.2009 (ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் இந்தியா முமுவதும் நடத்தப்பட உள்ளன.
தமிழ்நாட்டிலும் முகாம்கள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 5 வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் மேற்கண்ட முகாம் நாட்களின்போது போலியோ சொட்டுமருந்து கூடுதலாக வழங்கப்படும். பல்ஸ் போலியோ முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக போலியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், உத்திரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் இப்போதும் போலியோவினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கும் போலியோ நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளதால், இந்த ஆண்டும் போலியோ சிறப்பு முகாம்களை வெற்றிகரமாக நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
முகாம் நாட்களில் போலியோ சொட்டுமருந்து கொடுப்பதன் அவசியம் : போலியோவை உண்டாக்கும் வைரஸ் நுண் கிருமிகள் குழந்தைகளை பாதிக்கச் செய்வதோடு, அவர்களின் கால்களை நிரந்தரமாக ஊனமடையச் செய்கின்றன. போலியோ நுண் கிருமிகள் அசுத்தமான தண்ணீர், உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன.
இந்நோய் வருமுன் காப்பதே மேலாகும். அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் நடத்தப்படும் பல்ஸ் போலியோ முகாம்களில் அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து கொடுப்பதுதான். பாதுகாப்பான தடுப்பு மருந்து கொடுக்கப்படும் போது, நோய் பாதிப்பை உண்டாக்கும் கொடிய நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
வழக்கமாக கொடுக்கும் தடுப்புமருந்தின் மூலம் போலியோ நோய் பரவாமல் தடுக்கப்பட்டாலும், ஒரே சமயத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நுண்கிருமிகள் பரவாமல் சுற்று சூழலிலிருந்து அறவே ஒழிக்க முடியும். ஆகவே, ஒரு குழந்தை கூட விடுபடாமல் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து கொடுக்கப்படவேண்டும்.
வெளி மாநிலத்தவர் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து: கட்டுமானப் பணிகள், மேம்பாலம், ரயில்வே இருப்புப்பாதை சீரமைப்புப் பணிகளில் வெளி மாநிலத்தவர் ஏராளமானோர் தமிழ்நாட்டில் வேலை பார்க்கின்றனர். பிற மாநிலங்களில் போலியோ நோய் கிருமிகள் தற்போது இருந்து வருவதால் அங்கிருந்து வந்து போகும் மக்கள் மூலம் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு போலியோ நோய் பரவும் ஆபத்து உள்ளது.
எனவே இத்தகைய இடம் பெயர்ந்தோர் குழந்தைகளை தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு செய்து, அவர்களுக்கும் வருகின்ற 21.12.2008, 1.2.2009 ஆகிய முகாம் தேதிகளில் தவறாமல் சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் : அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் முதல் சுற்றின்போது (21.12.2008) ஒரு தவணை சொட்டுமருந்தும் மீண்டும் இரண்டாம் சுற்றின்போது (1.2.2009) இன்னொரு தவணையும் கொடுக்கப்பட வேண்டும்.
போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது. எத்தனை முறை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அதனால் எந்த பாதிப்பும் இல்லை.
ஓரிரு நாட்களுக்கு முன்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் கொடுக்கவேண்டும்.
முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்து வழக்கமான தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்திற்கு மாற்று அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும்.
இரண்டொரு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
தமிழ்நாட்டில் 40,399 சிறப்பு மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சொட்டுமருந்து வழங்கும் சிறப்பு மையங்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள், முக்கியமான பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில்கள், சுற்றுலா மையங்கள் ஆகிய இடங்களில் நடமாடும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, முகாம் நாட்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவர்களும் தங்களது மருத்துவமனைகளின் மூலமாக முகாம் நாட்களின் போது இலவசமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 70 லட்சம் குழந்தைகள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். இப்பணியைச் சிறப்பாகச் செய்ய பல்வேறு அரசுத் துறைகள், ரோட்டரிச் சங்கம், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் ஈடுபடுவார்கள்.
சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்து கொள்வதற்காக, குழந்தையின் இடது கை சுண்டு விரலில் ஜென்ஷன் வயலட் என்ற அடையாள ''மை” வைக்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களின் நலன் கருதி சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் அவரவர் வசிப்பிட பகுதிகளுக்கு அருகாமையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பெற்றோர்கள் அனைவரும் 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளை போலியோ முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
“சொட்டு மருந்து கொடுப்போம்; போலியோவை ஒழிப்போம்; குழந்தை நலம் காப்போம்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.