பணிநிரந்தரம் கோரி ஜனவரி 26ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு
புதன், 17 டிசம்பர் 2008 (10:11 IST)
பணிநிரந்தரம், 8 மணி நேர பணி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநில தலைவர் பி.எஸ்.சவுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) மாநில செயற்குழு கூட்டம் 15.12.2008 திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அரசியல் நிர்ணய சட்டத்தின் பெயரில் பதவி பிரமாணம் செய்து ஆட்சிக்கு வருபவர்கள் அரசியல் நிர்ணய சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 8 மணி நேர வேலை, வார விடுமுறை வழங்கிட வலியுறுத்தியும் தமிழக அரசின் நிரந்தர பணி வழங்கும் சட்டத்தின்படி 480 நாட்கள் 2 வருடங்களில் பணி புரிந்தால் நிரந்தரமாக்கிட வேண்டும் என்ற விதி இருக்கிறது.
எனவே, 5 ஆண்டுகள் பணி முடித்த டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஜனவரி 26ஆம் தேதி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவது எனவும் மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது அமலில் உள்ள இன்சென்டிவ் கொள்கையினை ரத்து செய்து, ஏற்கனவே இருந்த கொள்கையினை அமல்படுத்திட வேண்டும். நியாயமான மாறுதல் கொள்கை, பதவி உயர்வு கொள்கை வேண்டும். விசாரணையின்றி பணி விடுப்பு செய்யக்கூடாது. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், பி.எட். படித்தவர்களுக்கு ஆசிரியர் பணி, உடல் ஊனமுற்றவர்களுக்கு 2 ஆண்டுகள் முடிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டன என்று சவுந்திரபாண்டியன் தெரிவித்துள்ளார்.