''போலி குடும்ப அட்டைகள் உள்பட பல்வேறு காரணங்களால் திருமங்கலம் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 13,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர்'' என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் இடைத்தேர்தல் பழைய வாக்காளர் பட்டியல்படி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் தற்போது தொகுதியில் 13,000 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லை. இதனால் நீக்கப்பட்ட வாக்காளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் 1,69,523 பேர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், தற்போது 1,55,647 வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அதாவது 13,876 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லை.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சீதாராமன் தெரிவிக்கையில், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வீடு, வீடாக நடந்தது. இதில் திருமங்கலம் தொகுதியில் இருந்து வேறு இடத்துக்கு வீடு மாறி சென்றவர்கள், வேறு ஊர்களுக்கு பிழைப்பு தேடி சென்றவர்கள், போலி குடும்ப அட்டைகள் உள்பட பல்வேறு காரணங்களால் முன்பு இருந்த பட்டியலில் இருந்து 13,000 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். இது முறைப்படி அறிவிக்கப்பட்டு உள்ளது என்றார்.
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதையொட்டி திருமங்கலம் தொகுதியில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து இருப்போர் அவற்றை உடனே காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆட்சித் தலைவர் சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார்.