அருந்ததியர் உள் ஒதுக்கீடு விரைவில் சட்டமாக வருகிறது: கருணாநிதி

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (10:20 IST)
அருந்ததியர் உள் ஒதுக்கீடு விரைவில் சட்டமாக வருகிறது என்று முலமைச்சர் கருணாநிதி கூறியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

webdunia photoFILE
தி.மு.க.வின் தாக்குதல், விமர்சனங்கள் கடுமையாக உள்ளன என்று கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் பேசியிருப்பதாக ''ஜனசக்தி'' குறிப்பிட்டிருக்கிறதே?

எதைக் கடுமையான விமர்சனம் என்று தோழர் வரதராஜன் சொல்கிறாரோ தெரியவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக கழக அரசு ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கும் 7,500 ரூபாயையும்; மற்றும் பயிர்ப்பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் கிடைக்கின்ற தொகையையும் சேர்த்து சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரையில் ஒரு விவசாயிக்கு கிடைக்கும் என்றும்; ஆனால் கம்யூனிஸ்டு கட்சியினர் 15 ஆயிரம் ரூபாயும், 25 ஆயிரம் ரூபாயும் முறையே பயிருக்கும் வீட்டுக்கும் நிவாரணமாக தரவேண்டும் என்று கோரிக்கை எழுப்பியதை வைத்து; அதற்கு பதில் அளித்த நான், பக்கத்து மாநிலமான கேரளாவில், இது போன்ற இயற்கை சீற்றங்களின் போது கம்யூனிஸ்டு கட்சிகள் குறிப்பிடுகிற தொகையை அரசு கொடுத்திருக்குமேயானால்; அதை விட ஆயிரம் ரூபாய் அதிகம் தருவதற்கு, நமது அரசும் தயார் என்று சொன்னேன். இதில் என்ன கடுமை உள்ளது? கனிவான வாதத்தை கடுமை என்று கம்யூனிஸ்டு தலைவர் வரதராஜன் கற்பனை செய்யலாமா?

விஜயகாந்த் கலந்து கொள்கிற எல்லாக்கூட்டங்களிலும், தங்களைத் தரக்குறைவாகவும், இட்டுக்கட்டிய பொய்களை சொல்லியும் தாக்கி பேசிவருகிறாரே; என்ன காரணம்?

தாங்கிக் கொள்வேன் என்பதால்தான்!

விஜயகாந்த் நடத்துகின்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தவிடாமல் ஆளும்கட்சி நெருக்கடி கொடுப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறாரே?

ஆளுங்கட்சியான தி.மு.க.வின் முன்னணியினரே வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி; இதுவரை 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கியிருப்பதால், அந்த முகாம்களை முன்னின்று நடத்திய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியையும், கழக முன்னோடிகளையும் பாராட்டி, 'இந்து' பத்திரிகை ஒரு நீண்ட கட்டுரையே தீட்டி இருக்கிறது.

எனவே, வேலைவாய்ப்பு தருவதற்கு யார் முன்வந்தாலும், அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறதே தவிர, வேலைவாய்ப்புக்களை தடுத்து, வேலையின்மையை அதிகப்படுத்துவதால் இந்த அரசுக்கும் பாதகம்தானே அல்லாமல், எந்த சாதகமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

கருணாநிதி குடும்பம் ஒன்று சேர்ந்தது ஏன் என்று, கண்ட கண்ட கற்பனைகளையெல்லாம் வெளியிட்டு, இரண்டு கட்சிகளின் தலைவர்கள் எனப்படுவோர் கூட்டங்கள் தோறும் பேசி வருகிறார்களே?

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்றொரு பழமொழி உண்டு. ஊரார் ஒற்றுமையாக இருந்தால், கூத்தாடிக்கு வருமானம் ஒரு இடத்தில் மட்டும்தானே கிடைக்கும். பிளவுபட்டால் இரண்டு இடத்திலும் கிடைக்குமல்லவா?

இலங்கை அரசுடன் தமிழக முதலமைச்சர் கூட்டணி என்று தலைப்பிட்டு கம்யூனிஸ்டு இதழ் "ஜனசக்தி'' செய்தி வெளியிட்டுள்ளதே?

பண்டித நேரு இந்தியாவின் பிரதமராக இருந்த போதே, "மக்மகான்'' எல்லைக்கோடு பிரச்சனையில், சீனா, இந்தியா மீது போர் தொடுத்த போது; மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், அதை போர் என்று சீனாவைக் குற்றம் சாட்டக்கூட இந்திய கம்யூனிஸ்டுகள் ஒத்துக்கொள்ளவில்லை. இப்பொழுது அவர்கள்தான் தமிழக அரசும், இலங்கை அரசும் கூட்டணி என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடுகிறார்கள்!

சூனியக்காரி, சூதுக்காரி, வஞ்சகி, பத்ரகாளி- என்றெல்லாம் உரத்த குரல் நீங்கள் கேட்டதுண்டா?

ஆமாம்; எங்கேயோ கேட்டகுரல் என்றுதான் ஞாபகம்! இப்போது நினைவுக்கு வருகிறது. 'பொடா' சட்டம் பாய்ந்ததை கேள்வியுற்று, சென்னை விமானநிலையத்தில், அந்த விமான நிலையமே அதிரக்கூடிய அளவுக்கு ஒருவர் போட்ட கூச்சலில் ஒலித்த வார்த்தைகள்தான் அவைகள்!

'அமைச்சர் பதவியில் இருப்பவர்கள்: பத்திரிகையில் கதைகள் எழுதலாமா' என்று மார்க்சிஸ்ட் வரதராஜன் கேட்டிருக்கிறாரே?

ஏன் எழுதக்கூடாது? முதலமைச்சர் பதவி வகித்த சேக்கிழார் பெரியபுராணமே எழுதியிருக்கிறாரே! மந்திரியாக இருந்த மாணிக்கவாசகர் அருளியதுதானே திருவாசகம்? அவர்களெல்லாம் எழுதியிருக்கும்போது, நான் மட்டும் கதை எழுதக் கூடாதா?

என்னைப்பற்றி தன்னுடைய கருத்தை எழுதிய தமிழறிஞர் மு.வரதராசனார், "தமிழ் அரசர்களான நலங்கிள்ளி, நெடுங்கிள்ளிக்கு பின் புலவனாகவும், அரசனாகவும் வாழ்பவர் கலைஞர் ஒருவர்தான்'' என்றுதானே குறிப்பிட்டார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வரதராஜன் வருந்துகிற அளவுக்கு, அப்படித்தான் என்ன எழுதிவிட்டேன்; "அடித்தாலும் உதைத்தாலும் அந்த அவலட்சணமான யானைப் பாகனைத்தான் நான் விரும்புகிறேன்'' என்று சொல்லுகிற "அமிர்தமதி'' என்பவளுடன் சில அரசியல்வாதிகளை ஒப்பிட்டால்; அது ஒரு பெரிய தவறா என்ன?

கிறித்தவ தலித் மக்களுக்கும் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீடு பொருந்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளதே?

இந்த கோரிக்கை ஏற்கனவே எழுப்பப்பட்டு; இதிலுள்ள நியாயத்தை உணர்ந்து, கழக அரசு 2006ஆம் ஆண்டிலேயே மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளது.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு என்ன ஆயிற்று?

அனைவரும் மகிழ அது விரைவில் சட்டமாக வருகிறது! எ‌‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.