தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 110 மில்லி மீட்டர், ராமேஸ்வரம் பகுதியில் 100 மில்லி மீட்டர், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் 90 மில்லி மீட்டர் மழையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாஞ்சோலை, பாம்பன், சேர்வலா அணை, ராம நதி அணை பகுதி உள்ளிட்ட பகுதிகளிலும் 50 முதல் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய குமரி கடலில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 4 முதல் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னை பகுதியில் அதிகபட்சமாக 92 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கும் என்றும் மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.