நாகர்கோவிலில் எனது ஆட்சி காலத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆயுர்வேத அரசு மருத்துவக்கல்லூரியை கிடப்பில் போட்ட தி.மு.க. அரசை கண்டித்து அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொது செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்தா, ஆயுர்வேத, யுனானி, யோகா, இயற்கை மருத்துவம், ஓமியோபதி சிகிச்சை முறைகள் அலோபதி சிகிச்சைக்கு நல்ல மாற்றாக உருவாகியுள்ளன. இதன் காரணமாக பெருவாரியான மக்கள் மேற்படி மருத்துவ முறைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத முறையை ஏழை, எளிய மாணவர்கள் கற்கவும், அதன் பயன் ஏழை, எளிய மக்களைச் சென்றடையவும் எனது ஆட்சிக் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஆயுர்வேத அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் அத்திட்டம் கடந்த 31 மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மருத்துவப் பணி என்பது உன்னதமான பணி. அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி தொடங்குவதன் மூலம் ஏழை, எளிய மாணவ-மாணவியர் பயனடைவதோடு மட்டுமல்லாமல் அதன் பயன் ஏழை, எளிய மக்களையும் சென்றடையும். இது குறித்து அப்பகுதி மக்கள் தி.மு.க. அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் அரசு நிர்வாகம் இதை கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
இதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், நாளை (16ஆம் தேதி) நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.