சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பல பகுதிகள் தண்ணீர் தத்தளிக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் மழை நீர் அதிகமாக தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
ஏரிகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் விருகம்பாக்கம் தீவு போல் காட்சி அளிக்கிறது. மழையால் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து விருகம்பாக்கம் செல்லும் சாலையும், வடபழனியில் இருந்து விருகம்பாக்கம் செல்லும் சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
விருகம்பாக்கத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. சின்மயாநகர், குமரன்நகர் உள்பட 40 காலனிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அரும்பாக்கம் பகுதியில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. வடிகால்கள் சரி வர பராமரிக்கபடாததால் அங்குள்ள எம்.எம்.டி.ஏ. காலனி, ஆசாத்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வட சென்னை முத்தமிழ்நகரில் பல பகுதிகளில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. சூளைமேடு என்.ஜி.ஓ. காலனியில் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் ஓடுகிறது.
கூவம் ஆற்று உடைப்பில் இருந்து தண்ணீர் வருவது குறைந்தால்தான் இங்குள்ள வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியும். சாக்கடை நீர் பாய்ந்துள்ளதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஆலப்பாக்கம் ஏரி உடைந்ததால் வளசரவாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம், வட பழனி, எம்.எம்.டி.ஏ. காலனி ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வேலைக்கு செல்வோர் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழைநீர் தேங்கி இருப்பதால் விபத்து ஏற்பட்டு விடாமல் இருப்பதை தடுக்க மின்சப்ளை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கேபிள் வயர் காரணமாக மின்சப்ளை பாதிக்கப்பட்டால் 28521109- 28524422 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் செய்யலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனிடையே சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் தாழ்வானப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மாநகராட்சி சமுதாயக் கூடங்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சென்னை மாநகராட்சி மூலம் நேற்று 5 லட்சத்து 96 ஆயிரத்து 200 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 1 லட்சத்து 60 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் நிவாரண மையங்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.