மின்வெட்டை‌க் கண்டித்து தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!

புதன், 19 நவம்பர் 2008 (14:57 IST)
மின்வெட்டை‌க் கண்டித்து தர்மபுரியில் வரு‌ம் 21ஆ‌ம் தே‌தி அ.இ.அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் க‌‌ண்டன ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம் நடைபெறும் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று விடுத்துள்ள அறிக்கையில், "தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சேகோ மற்றும் ஸ்டார்ச் தொழிற்சாலைகளில் கடுமையான மின்வெட்டு நிலவுவதால் குறிப்பிட்ட நேரத்தில் அரவை செய்ய முடியவில்லை என்றும், இதனால் மரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதற்காக தேவைப்படும் திட்ட மதிப்பீட்டில் அங்கத்தினர்களின் பங்களிப்புத் தொகை 10 விழுக்காடு இருக்க வேண்டும் என்பதைக் காரணம் காட்டி சென்ற ஆண்டு கரும்புத் தொகையிலிருந்து டன்னுக்கு 90 ரூபாயை அங்கத்தினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே ஆலை நிர்வாகம் பிடித்தம் செய்து கொண்டதாகவும், அதே போன்று இந்த ஆண்டும் பிடித்தம் செய்யப் போவதாகவும் விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கடும் மின்வெட்டு காரணமாக விவசாயிகள் ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்ற இச்சூழ்நிலையில், இது போன்ற கூடுதல் நிதிச் சுமையை அவர்கள் மீது திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே, தர்மபுரி மாவட்டத்தில் மின்வெட்டை அமல்படுத்தி அதன் மூலம் அப்பகுதி மக்களை தாங்க முடியாத வேதனையில் ஆழ்த்தியிருப்பதை கண்டித்தும், சுப்ரமணியசிவா கூட்டுறவு விவசாயிகளிடமிருந்து சென்ற ஆண்டு பிடித்தம் செய்யப்பட்ட தொகையான 3 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக விவசாயிகளிடம் திருப்பித் தர வலியுறுத்தியும், நடப்பாண்டிலும் இது போன்ற தொகையை விவசாயிகளிடமிருந்து பிடித்தம் செய்ய திட்டமிட்டிருப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், அ.தி.மு.க. தர்மபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில், 21ஆ‌ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எ‌ன்று கூற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்