‌நியாய‌விலை கடைக‌ளி‌ல் தரமா‌ன அ‌ரி‌சி : ‌விஜயகா‌ந்‌து‌க்கு எ.வ. வேலு ப‌தி‌ல்!

சனி, 15 நவம்பர் 2008 (16:04 IST)
ஆந்திர மாநிலத்தில் இருந்தும் தஞ்சை டெல்டா பகுதியில் இருந்துமகொள்முதல் செய்யப்படும் தரமான அரிசியே ‌நியாய ‌விலை கடைகளில் வழங்கப்படுவதாக ‌விஜயகா‌ந்‌‌த் கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்கு உணவு‌த் துறை அமை‌ச்ச‌ர் எ.வ. வேலு ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது மக்களின் நலனுக்காக தமிழகத்தில் 29,854 நியாய விலை கடைகள் நடத்தப்படுகிறது. மாதத்திற்கு 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படுகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கப்படுவதால் நுகர்வு ‌விழு‌‌க்காடு உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இருந்தும் தஞ்சை டெல்டா பகுதியில் இருந்தும் கொள்முதல் செய்யப்படும் அரிசியே ரேஷன் கடைகளில் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. எனவே பழைய அரிசி என விஜயகாந்த் கூறுவது தவறான கருத்தாகும்.

மேலும் பகுதிநேர கடைகள் அதிகமாக திறக்கப்பட்டு பொது மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. விஜயகாந்த் வார ஏடு ஒன்றில் கூறியுள்ள கடையில் உள்ள அரிசி மாதிரி எடுக்கப்பட்டு தரமான அரிசி என சான்று அளிக்கப்பட்டுள்ளது.

குறைகளை தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறைகளை தெரிவித்தால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.

குறைபாடுகள் உள்ள நியாயவிலை கடைகளை விஜயகாந்த் என்னோடு வந்து அடையாளம் காட்டினால் நானே நேரில் சென்று குறைபாடுகளை களைய தயார் எ‌ன்று அமை‌ச்ச‌ர் எ.வ. வேலு‌ கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்