அதிரடிப்படை வாகனம் மோதி விவசாயி காயமடைந்ததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே உள்ள புதுவடவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி (35). இவர் நேற்று மாலை 6 மணிக்கு கால்நடைகளை மேய்த்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, வடவள்ளி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த அதிரடிப்படை வாகனம் சின்னதம்பி மீது மோதியது. இதில் சின்னதம்பி பலத்த காயமடைந்தார்.
ஆனால் வாகனத்தில் வந்த அதிரடிப்படையினர் நின்று பார்த்துவிட்டு விபத்துக்குள்ளானவருக்கு உதவிசெய்யாமல் சென்றுவிட்டனர். உடனே ஊர் பொதுமக்கள் சத்தியமங்கலம் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து காயமடைந்த சின்னதம்பியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதையடுத்து, பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட அதிரடிப்படையினரை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த அதிரடிப்படை காவல்துறை கண்காணிப்பாளர் கருப்புசாமி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவந்தப்ட்ட வாகன ஓட்டுனர் மீது பொதுமக்கள் முன்னிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில், விபத்து ஏற்படுத்திய அதிரடிப்படை வாகனத்தில் அதிரடிப்படை ஆய்வாளர் சொரிமுத்து, உதவி ஆய்வாளர் அருள் ஆகியோர் சென்றது தெரியவந்தது.
காயமடைந்த சின்னதம்பியின் மருத்துவசெலவை ஏற்றுக்கொள்வதாகவும் பொறுப்பின்றி நடந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உத்தரவாதம் கொடுத்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இரவு 9 மணிவரை நடந்த இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.